ஊட்டியில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை பதிவு!
ஊட்டியில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவிற்று 29°C செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயில் சதமடித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் எனவும் தமிழ்நாட்டில் வட உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மலை மாவட்டமும், சுற்றுலா தளமுமான ஊட்டியில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவிற்று வெப்பநிலை பாதிவாகியுள்ளது. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 29°C செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5.4 டிகிரி செல்சியஸ் அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.