கோடை எதிரொலி - அதிகரிக்கும் வெப்ப கால நோய்கள்!
கோடை வெப்பத்தால் மஞ்சள்காமாலை மற்றும் இரப்பை குடல் அழற்சி நோய் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடையில் வெப்பத்திலிருந்து தப்ப, தாகத்தை தணிக்க நீர்ச்சத்துக்காக பழச்சாறுகள் பருகுவோம், பழங்களை உண்போம். ஆனால் வெளியில் செல்லும்போது சாலையோரங்களில் விற்கப்படும் இளநீர் வாங்கி அருந்துவோம். இளநீர் உடலுக்கு நல்லது. ஆனால் சாலையோரங்களில் விற்கப்படும் வெட்டப்பட்ட பழங்கள், பழச்சாறுகள் உடலுக்கு நோய்களை ஏற்படுத்தும் என புனேவில் உள்ள அங்குரா மருத்துவமனையின் மூத்த மருத்துவர் சீமா ஜோஷி தெரிவித்துள்ளார். இதனால் குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை மற்றும் இரப்பை குடல் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;
கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து மஞ்சள் காமாலை, குமட்டல், வாந்தி, சோர்வு, பசியின்மை மற்றும் காய்ச்சல் என பல புகார்களுடன் குழந்தைகள் வருகின்றனர். இந்த நோய்களிலிருந்து தப்ப சரியான நேரத்தில் மருத்துவ கவனிப்பு தேவை. குழந்தைகளுக்கு வரும் மஞ்சள்காமாலையை தடுக்க வெளிப்புற உணவு மற்றும் பானங்களை அவர்கள் உட்கொள்ளாமல் இருப்பதில் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வீட்டில் சமைத்த உணவை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக கோடைகாலங்களில் வீட்டு உணவுகளை குழந்தைகளுக்கு பழக்கப் படுத்த வேண்டும். இரப்பை குடல் அழற்சி வெயில் நாட்களில் குழந்தைகளுக்கு எளிதாக வரக்கூடும். கெட்டுப் போன உணவுகள், சுத்தமற்ற சாலையோர உணவுகள், தண்ணீர் போன்றவை இதற்கு முக்கிய காரணமாகின்றன.
ஏனெனில் முன்னரே வெட்டி வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் அவற்றின் சாறுகள் மேலும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் போன்றவற்றில் கொசுக்கள், ஈக்கள் போன்றவற்றால் பாக்டீரிய தொற்று பரவியிருக்கும். இது மாசுத்தன்மை கொண்டதோடு உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சாலையோர உணவுகளை தவிர்க்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் கைகளை சுத்தமாக கழுவ சொல்ல வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு ஏதேனும் வாந்தி, மயக்கம் போன்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்” என தெரிவித்துள்ளார்.