உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காய்!
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளரிக்காய் கோடைகால சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. மேலும், எடையை குறைப்பதற்கும், செரிமானத்திற்கு உதவுகிறது. கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. இயற்கையாகவே அதிகளவான தண்ணீரைக் கொண்ட வெள்ளரிக்காய், மனித உடலின் திரவ உட்கொள்ளலை அதிகரிப்பதோடு உடலை குளிர்ச்சியாக்குகிறது.
வெள்ளரிக்காயில் குறைந்த கலோரிகள், நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் ஏ, சி, கே உட்பல பல சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காய் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் மற்றும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
உஷ்ணத்தால் கண்கள் சோர்வாக இருந்தாலோ அல்லது வீங்கியிருந்தாலோ, வெள்ளரிக்காய் துண்டை 10-15 நிமிடங்கள் வைத்திருந்தால் அதனை சரிசெய்து, கண்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும். வெள்ளரிக்காய் சாறை சருமத்தில் தடவினால், சருமம் இளமையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளையும் குறைக்கிறது.
வெள்ளரிக்காயை சாலட், சூப்கள் போன்று செய்து சாப்பிடலாம். புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சேர்த்து தண்ணீரில் சிறிய க்யூப்ஸ் வெள்ளரிக்காய் சேர்த்து ஒரு பானத்தையும் நீங்கள் செய்யலாம். இது கோடையில் உங்கள் வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.