தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!
தவிப்பும் ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம் என தூத்துக்குடியில் வெள்ள நிவாரணப்பணியை ஒப்பிட்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடா்ச்சியாக ஒரு வார காலம் மேற்கொள்ளப்பட்டு, பல இடங்களில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் படிப்படியாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். வெள்ள பாதிப்பின்போது வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை, கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 63 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு 48,763 கிலோ உணவுப் பொருட்கள் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது..
இந்நிலையில் இதுகுறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“உணவுப்பொட்டலங்களை வழங்குவதில் இருக்கும் பிரச்சனை பற்றி ஹெலிகாப்டரை இயக்கும் விமானிகளோடு பேசிக்கொண்டிருந்தேன். “நாங்கள் மக்களுக்கு நெருக்கமாகத்தான் போக முயற்சிக்கிறோம். கீழே இறங்கினால் மரங்கள் சாய்கின்றன. கூரைகளும் ஓடுகளும் பறக்கின்றன. மேலே உயரம் போனால் உணவுப்பொட்டலங்கள் விழுந்து சிதறுகின்றன” என்று பெரும் தவிப்போடும், ஆற்றாமையோடும் சொன்னார். அந்த தவிப்பும் ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம். நான் வேறுயாருடனும் அவரை ஒப்பிடவிரும்பவில்லை.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.