மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி பதவியேற்பு!
இன்போசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
‘வாரத்திற்கு 70 மணி நேர வேலை’… கடந்த ஆண்டு நாடு முழுவதும் பேசுபொருளான இந்த கருத்தை கூறியவர் இன்ஃபோசிஸ் இணை-நிறுவனரான நாராயணமூர்த்தி. இவரது மனைவி சுதா மூர்த்தி. இருவருமே தங்களது செயல்களால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். அண்மையில் இவர்கள் பெங்களூரில் உள்ள சாலையோர கடை ஒன்றில் எளிமையான முறையில் புத்தகங்களை வாங்கிச் சென்றது இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.
இப்படி கணவன் – மனைவி இருவருமே பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் நிலையில், மகளிர் தினத்தன்று சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சுதா மூர்த்திக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான ஜகதீப் தன்கர் இன்று (மார்ர்.14) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சுதா மூர்த்தியின் கணவரும், இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியார் சுதா மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.