For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம் - யார் இவர்?

04:10 PM Mar 08, 2024 IST | Jeni
மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம்   யார் இவர்
Advertisement

இன்ஃபோசிஸ் இணை-நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

‘வாரத்திற்கு 70 மணி நேர வேலை’...  கடந்த ஆண்டு நாடு முழுவதும் பேசுபொருளான இந்த கருத்தை கூறியவர் இன்ஃபோசிஸ் இணை-நிறுவனரான நாராயணமூர்த்தி.  இவரது மனைவி சுதா மூர்த்தி.  இருவருமே தங்களது செயல்களால் அவ்வப்போது செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர்.  அண்மையில் இவர்கள் பெங்களூரில் உள்ள சாலையோர கடை ஒன்றில் எளிமையான முறையில் புத்தகங்களை வாங்கிச் சென்றது இணையத்தில் அதிகம் பேசப்பட்டது.

இப்படி கணவன் - மனைவி இருவருமே பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் நிலையில்,  மகளிர் தினத்தன்று அவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.  அது என்னவென்றால்,  மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்திருப்பதை சுட்டிக்காட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சமூகப் பணி, தொண்டு,  கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது என்று தெரிவித்துள்ளார்.  மேலும், மாநிலங்களவையில் சுதா மூர்த்தி இருப்பது, பெண்களின் வலிமைக்கு மிகப்பெரிய சான்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஃபோசிஸ் இணை-நிறுவனருடைய மனைவி என்றுதான் சுதா மூர்த்தியை பலருக்கும் தெரியும். அவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் பின்வருமாறு :

சுதா மூர்த்தி,  ஒரு இந்திய எழுத்தாளரும், இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னாள் தலைவரும் ஆவார்.  சிறந்த பேச்சாளரும் கூட. பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய நாட்டின் உயரிய விருதுகளையும் சுதா மூர்த்தி பெற்றுள்ளார்.  கணவர் நாராயணமூர்த்தியை போன்று இவரும் பயிற்சி பெற்ற பொறியாளர். TELCO (Tata Engineering and Locomotive Company) நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் என்ற பெருமைக்கு உரியவர் சுதா மூர்த்தி.நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஒருவர் அக்‌ஷதா மூர்த்தி, மற்றொருவர் ரோஹன் மூர்த்தி. இதில் அக்‌ஷதா மூர்த்தி,  பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உலகம் முழுவதும் பிரபலமான சுதா மூர்த்திக்கு,  மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு. எம்.பி. பதவி குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய சுதா மூர்த்தி,  இதனை தனது பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். நாட்டுக்கு சேவை செய்வதற்கான இந்த வாய்ப்புக்கு மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.  இன்றைய அறிவிப்பு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement