திடீர் அமைச்சரவை மாற்றம்: மீண்டும் துரைமுருகனுக்கு சட்டத்துறை... ரகுபதிக்கு கனிமவளத்துறை!
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுபோல, அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களாக இருந்த செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ராஜிநாமாவைத் தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் நிகழ்ந்தது. இந்த நிலையில், எதிர்பாராத நிலையில் மீண்டும் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அமைச்சர்களின் துறைகள் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
இந்த அமைச்சரவை மாற்றத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் முன்னரே சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்துள்ளார். 2009 -11ஆம் ஆண்டு துரைமுருகன் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். அவரும் சட்டம் படித்தவர், வழக்குரைஞர். அதன் அடிப்படையில் அவருக்கு தற்போது சட்டத்துறை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.