‘ஸ்டைல் பாண்டி’ வடிவேலு பாணியில் சுவரொட்டி ஒட்டி கொள்ளையடித்த கும்பல் - உ.பி. போலீசார் அதிர்ச்சி!
உத்தரபிரதேசத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் படத்தில் வரும் 'ஸ்டைல் பாண்டி' போன்று, கொள்ளையடிக்கும் வீட்டில் சுவரொட்டி ஒட்டி கொள்ளை கும்பல் ஒன்று கைவரிசையை காட்டியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் ஓட்வாரா ராகத்பூர் கிராமத்தில் வசிக்கும் நிர்மலா தேவியின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், அவரது வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களது கையில் சுவரொட்டியில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள் இருந்தன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கோபால் கிருஷ்ண சவுத்ரி கூறுகையில், ‘கடந்த டிசம்பர் 21-ம் தேதி, ருதௌலி காவல் நிலையத்திற்குட்பட்ட விசுனபுராவ கிராமத்தில் இரண்டு இடங்களில் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த சுவரொட் டியில் அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த கிராமத்தில் குறிப்பிட்ட வீடுகளில் கொள்ளை அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் டிசம்பர் 23-ம் தேதி, வால்டர்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோத்ரி கிராமத்திலும், டிசம்பர் 27-ம் தேதி முண்டர்வா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாபியாலுடவான் கிராமத்திலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதுபோன்ற சுவரொட்டிகளால் மக்கள் அச்சம் அடைந்திருந்தனர்.
காவல்துறையின் கனவத்திற்கு கொண்டு வரப்பட்டதால், சம்பந்தப்பட்ட கிராமக்களுக்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்க மக்களை அறிவுறுத்தி உள்ளோம். நிர்மலா தேவி என்ற பெண் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து, அடையாளம் தெரியாத நபர்கள் மீது ஐபிசி பிரிவு 457, 380 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகிறோம்’ என்றார்.
உத்தரபிரதேசத்தில் நடந்த மேற்கண்ட சம்பவத்தை பார்க்கும் போது, ‘நகரம்’ திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேல் மற்றும் அவரது சகாக்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் வீட்டின் முன் ‘வாழ்த்துகிறோம், எங்கள் ஆருயிர் அண்ணன், திருடர் குல திலகம், ‘ஸ்டைல் பாண்டி’ அவர்களின் 100வது திருட்டு விழா வெற்றி வெறவு, மேலும் பல வீடுகளில் திருடி 1000வது திருட்டு விழாவை கொண்டாட மனமார வாழ்த்துகிறோம்’ என்று எழுதி வைத்திருப்பர். இந்த நகைச்சுவை இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மொள்ளையர்கள் வீடு புகுந்து திருடுவதற்கு முன்பு, உத்தரபிரதேச வீடுகளில் சுவரொட்டி ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.