"டெங்குவை குறைப்பதில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி" - பலனளிப்பதாக ஆய்வில் தகவல்!
டெங்குவை குறைப்பதில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி 50 சதவீதத்துக்கும் மேல் பலனளிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி, நோயாளிகளுக்கு டெங்குவில் இருந்து நீண்டகால பாதுகாப்பு வழங்கும் திறனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கியூடெங்கா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 20,000-க்கும் மேற்பட்ட நபா்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆசியாவிலிருந்து 13 ஆய்வுகளும் அமெரிக்காவிலிருந்து 6 ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
"தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக்கொண்ட 90 சதவீத குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு டெங்குவின் 4 வகையான நோய்களையும் எதிா்கொள்ள தேவையான எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. ஜப்பானில் உள்ள டகேதா மருத்துவ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி ‘டிஏகே-003’ எனவும் அழைக்கப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவா்கள், பாதிக்கப்படாதவா்கள் மற்றும் ஒரு தவணை மட்டும் செலுத்திக் கொண்டவா்களில் 70 சதவீத குழந்தைகளுக்கும் 90 சதவீத பெரியவா்களுக்கும் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கோவை மற்றும் நீலகிரிக்கு இன்றும் நாளையும் ஆரஞ்ச் எச்சரிக்கை! – வானிலை ஆய்வு மையம் தகவல்
ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வில் பங்கேற்ற 20,000 பேரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்குவை எதிா்கொள்ளும் சிறந்த மற்றும் நீண்டகால பாதுகாப்பை கியூடெங்கா வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. கியூடெங்கா தடுப்பூசியை செலுத்திக் கொண்டோருக்கு நல்ல முடிவுகள் தந்திருந்தாலும், அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீடுகள் தற்போது வரை இல்லை"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.