#Thanjavur | தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!
தொடரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாள மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கவும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு இயற்றப்படும் சட்டத்தால் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை அவதூறாக பேசக்கூட சிந்திக்கா வண்ணம் இருக்க வேண்டும் என பத்ம விருது பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கிடையே, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தொடரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்து தஞ்சை அரசு சரபோஜி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் எனவும், கொல்கத்தா பாலியல் வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.