மாணவர் சங்கத் தேர்தல் எதிரொலி - பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு !
பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் நேற்று (மார்ச்.5) பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தர்பாங்கா கட்டடத்தின் அருகிலுள்ள பொருளாதாரத் துறையின் நூலகத்தின் வாசலில் பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதனால் உண்டான அதிர்வில் நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் ஆசிரியர் ஒருவரின் காரின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிராபாஹோர் காவல் துறையினர், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாணவர் சங்கத் தேர்தலில் தங்களது ஆளுமையை காண்பிக்க சில மாணவர் குழுக்களினால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மாணவர்கள் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும், போலீஸார் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பை அதிகரித்ததுடன் வெடித்து சிதறிய வெடிகுண்டு பாகங்களைக் கைப்பற்றி அது எவ்வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக, வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் தேர்தல் முடிவுகள் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரவிருக்கும் தேர்தல்களுக்காக பல்கலைக்கழக துணைவேந்தர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மேலும், அங்குள்ள சுவர்களில் எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தேர்தலையொட்டி வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு காவல்துறையினர் கடுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.