இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி! - பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாததால் கண்ணீர் மல்க பேட்டி!
இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கடந்த சில நாட்களாகவே போராட்டம் நடத்தி வருகின்றனர். நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. ’Gaza solidarity encampment’, அதாவது காசாவுக்கு ஆதரவாக கூடாரங்கள் அமைத்துப் போராடுதல் என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவுக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, பின்னர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த இடைநீக்கத்தால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாது சூழல் சில மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
WATCH: We spoke with ASU senior Breanna Brocker outside the courthouse, who said she will not be able to graduate because the suspension will cause her to miss her final exam pic.twitter.com/FKGaMuzOt7
— Ben Brown (@bdbrown473) May 4, 2024
அமெரிக்காவின் அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் மாணவி பிரேனா ப்ரோக்கர். இவர் இஸ்ரேலுக்கு எதிரான போரட்டத்தில் கலந்து கொண்டதையடுத்து இவரது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது;
“தற்போது நான் பல வழிகளில் கட்டுப்படுத்தப்படுகிறேன். எனது பட்டமளிப்பு விழாவிற்கு எனது பெற்றோரை வர வேண்டாம் என சொல்லக்கூடிய சூழலில் நான் உள்ளேன். நான் பெரும் ஏமாற்றத்தில் உள்ளேன். எனக்கு சரி என தோன்றியதை நான் செய்தேன். அது சரிதான் என இப்போதும் நான் நம்புகிறேன். அது எனக்கு பாதகமானதாக இருந்தாலும் நான் நிற்பேன்”. என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பேட்டியின் போது மாணவி புரோக்கர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் அவர் போராட்டத்தில் கலந்துகொண்டதன் விளைவே என விமர்சித்து வருகின்றனர். சிலர் அந்த மாணவிக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.