மாணவி பாலியல் வன்கொடுமை : பா.ம.க. சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சவுமியா அன்புமணி கைது !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.மகளிரணி தலைவி சவுமியா அன்புமணி மற்றும் பா.ம.க.வி.னர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனிடையே அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மாணவிகளின் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 140 காவலாளிகள் உள்ள நிலையில், கூடுதலாக 40 காவலாளிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பா.ம.க. மகளிரணி சார்பில் சௌமியா அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக தொண்டர்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சவுமியா அன்புமணி மற்றும் பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.