பிளஸ் 2 தேர்வில் தோல்வி - மாணவி எடுத்த விபரீத முடிவு... சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 15ஆம் தேதி, அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று (மே 8) +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால் 1 நாள் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 7, 53,142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்த வினோதினி என்ற மாணவி மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயரை மாய்த்துக்கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஆரணி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அவரின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தோல்வி பயத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரை மாய்த்துக் கொண்ட ஆர்த்திகா என்ற மாணவி 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.