“சென்னையில் தாய்ப்பால் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை" - உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் சதீஷ் நியூஸ்7 தமிழுக்கு பேட்டி!
“சென்னையில் தடையை மீறி தாய்ப்பால் விற்பனைச் செய்யப்பட்டால் கடையின் மீது 200 சதவீதம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் சதீஷ் நியூஸ்7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.
சென்னை மாதவரம் பகுதியில் ஒரு தனியார் மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை
செய்யப்படுவது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மே 24ஆம் தேதி அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டதில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. அதனை கண்டித்து தாய்ப்பால் இது போல் விற்பனை செய்யக்கூடாது எனவும், பாலை தானமாக வழங்கலாம் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.
அதை மீறியும் கடையின் உரிமையாளர் தாய்ப்பாலினை விற்பனை செய்து வந்ததன் எதிரொலியாக தற்போது அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்ற தாய்ப்பால் விற்பனை ஏதேனும் நடைபெறுகிறதா என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பாளர் சதீஷிடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் லட்சுமணன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;
சென்னை மாவட்டத்தை பொருத்தவரை தாய்ப்பால் எங்கேயாவது விற்பனை செய்யப்படுகிறாதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வந்ததில், தற்போது வரை
எங்கேயும் தாய்ப்பால் விற்பனை செய்யவில்லை.
மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தான் தாய்ப்பால் உரிய அனுமதியோடு
குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில்
தாய்ப்பால் எங்கேயும் விற்பனை செய்வது போன்ற தகவல்களும் கிடைக்கவில்லை. இது
போன்று ஏதேனும் நடக்கிறதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
மத்திய அரசு சார்பில் எந்த மாநிலத்திலும் தாய்ப்பால் விற்பனை செய்யக் கூடாது
என அறிவுரை வழங்கப்பட்ட நிலையில், அதனை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்து
கடைகளுக்கு தெரிவித்துள்ளோம். அதனையும் மீறி தான் மாதவரம் பகுதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டதுக்கு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மே 24ஆம் தேதி அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டதில் தாய்ப்பால் விற்பனை
செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது. தாய்ப்பாலை இது போல் விற்பனை செய்யக்கூடாது தானமாக வழங்கலாம் என அறிவுரை வழங்கப்பட்டது.
அதையும் மீறி அவர்கள் தாய்ப்பாலினை விற்பனை செய்து வந்ததன் எதிரொலியாக தற்போது அந்த கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனைக்கு
ஏதேனும் உரிமம் வழங்கப்பட்டிருந்தாலும் கூட அதனை ரத்து செய்ய வேண்டும் என
மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது,
கடந்த காலங்களில் தமிழ்நாட்டை பொறுத்தவரை தாய்ப்பால் விற்பனை என்பது மறைமுகமாக நடைபெற்று வந்துள்ளது . சென்னை மாவட்டம் பொறுத்தவரை இதுபோன்று ஏதேனும் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டால் அந்த கடையின் மீது 200 சதவீதம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு உணவு பாதுகாப்பு கண்காணிப்பாளர் சதீஷ் கூறினார்.