"மருது சகோதரர்களின் புகழைப் போற்றி வணங்குகிறேன்" - எடப்பாடி பழனிசாமி!
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். இதனால் மருது சகோதரர்களின் வீரத்தை போற்றும் வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை தமிழ்நாடு அரசு, அரசு விழாவாக கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேய அரசுக்கு எதிராக ‘போர் பிரகடனத்தை’ முதன்முதலில் வெளியிட்டு, வீரம் செறிந்த யுத்தம் நடத்தி, தாய் மண்ணின் சுதந்திரத்திற்காக தூக்கு கயிறையும் துச்சமென எண்ணி தன் இன்னுயிர்களை தியாகம் செய்த வீரத் தமிழர்கள், மாமன்னர் மருது சகோதரர்கள் அவர்களின் 224-ஆவது நினைவு தினம் மற்றும் குருபூஜை நாளான இன்று, அவர்களின் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் மணிமண்டபத்தில் உள்ள அவர்களின் திரு உருவச் சிலைக்கு, அதிமுக சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.