”டெல்லியில் தெரு நாய்களை பிடிக்கும் விவகாரம்”- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
நாடு முழுவதும் தெருநாய் கடி சம்பவங்கள் ஏற்பட்டு ரேபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்திற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும் நாய்கள் பிடிக்கப்படும் போது நாய்கள் நல ஆர்வலர்கள் என்ற பெயரில் யாரேனும் பணியை தடுத்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.இதனை தொடர்ந்து டெல்லி முழுவதும் தெருநாய்கள் மாநகராட்சி பணியாளர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக்கூறி மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வில் இன்று முறையீடு செய்தனர்.ஆனால் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
முன்னதாக, உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான தீர்ப்பை ஏற்கனவே நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.