இன்று உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல்: வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமாா் 450 கி.மீ. தொலைவிலும் நெல்லூருக்கு தெற்கு தென்கிழக்கே 580 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று (டிச. 3) புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச. 4) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம், அதையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும்.
இதையடுத்து வடக்கு திசையில் நகா்ந்து ஆந்திர மாநிலம், நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே நாளை மறுநாள் (டிச. 5) முற்பகலில் புயல் கரையைக் கடக்கும். அப்போது, 100 கி.மீ. வேகத்தில காற்று வீசக்கூடும். வானிலை முன்னறிவிப்பைப் பொருத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஞாயிற்றுக்கிழமை (டிச.3) டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். நாளை (டிச. 4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.