புயல் எதிரொலி - பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!
புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், படிப்படியாக மழை அதிகரித்து நாளை இரவு வரை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: புயல் எதிரொலி – புதுச்சேரியில் அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
இந்த நிலையில் பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் துறை எல்லையில் பழமையான கட்டிடங்களில் உள்ள குடியிருப்புகளை காவல் துறையினர் பட்டியலிட்டு வருகின்றனர்.
இதில் சென்னை பாரிமுனை, மண்ணடி, முத்தையால்பேட்டை, ஏழுகிணறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூறாண்டுகளுக்கு மேல் உள்ள 28 பழமையான கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கட்டடங்களின் தன்மையை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அதிக கனமழையால் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் அரசின் தற்காலிக முகாம்களில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.