குஜராத்தில் 6 அடுக்குமாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து விபத்து! - 15 பேர் காயம்!
குஜராத் மாநிலத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குஜராத் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், இடிந்து விழுந்த கட்டடத்துக்குள் மேலும் சிலர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமான ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இடிந்து விழுந்த கட்டடத்தில் 5 முதல் 6 குடும்பங்கள் வசித்து வந்தாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகளும் துணை மேயர் நரேந்திர பாட்டீலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், 2017-18 ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடம், 6 ஆண்டுகளில் இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : ஈரான் அதிபர் தேர்தல் : வெற்றி பெற்ற மசூத் பிசிஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
இந்த விபத்து தொடர்பாக சூரத் நகரின் காவல் ஆணையர் கூறுகையில் :
"இன்று மாலை 3 மணியளவில் இந்த கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தில் 30 பிளாட்கள் உள்ள நிலையில், 4 முதல் 5 பிளாட்களில் மட்டுமே மக்கள் வசித்து வந்துள்ளனர். பிற பிளாட்கள் அனைத்தும் காலியாக இருந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 5 முதல் 6 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.