"உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய் அண்ணா" - லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் !
தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நேற்று சென்னையில் இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 28 அணிகளை நேற்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த 28 அணிகள் குறித்த பட்டியல் அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தாலும், அதிகாரப்பூர்வமாக கட்சி தரப்பில் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, பட்டியலில் பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார் அணி, குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, மீடியா அணி, உண்மை சரிபார்ப்பு அணி, உள்ளிட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், திருநங்கையர் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்காக குரல் கொடுக்கும் திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா, இந்தப் பிரச்னையை சுட்டிக் காட்டியிருக்கிறார். இது குறித்து லிவிங் ஸ்மைல் வித்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம்.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த “9” என்னும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்? நடிகர் விஜய் திருநர் விங் என்று துவக்கியிருப்பது நல்ல விசயம். அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா!… pic.twitter.com/QK7ZnGti5z
— Living Smile (@livingsmile) February 11, 2025
அதை 9ம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள் விஜய்ண்ணா. இதையும் நாங்களே தான் மாரிலும், வயித்திலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ்கூறும் அறிவுஜீவுகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்” என்று குறிப்பிட்டுள்ளார்.