"ராகுல் காந்தியின் கார் தாக்கப்படவில்லை!" - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம்..!
பீகார்- வங்காள எல்லை அருகே ராகுல் காந்தியின் கார் மீது கல் வீச்சபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி ராகுல் காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்’ அருணாச்சல பிரதேசம் சென்றடைந்தது. தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, இந்த நடைப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது.
இதையும் படியுங்கள் ; CAA குறித்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சை பேச்சு – அரசியல் தலைவர்கள் கண்டனம்..!
2 நாட்கள் ஓய்வுக்கு பின் கடந்த 28ம் தேதி மீண்டும் தொடங்கிய ராகுலின் நடைபயணம் நேற்று முன் தினம் பீகாரை அடைந்தது. இதன்படி ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்' தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பீகார்- வங்காள எல்லை அருகே கட்டிஹார் என்ற பகுதியின் கல் வீச்சு என சந்தேகிக்கப்படும் வகையில் ராகுல் காந்தியின் காரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "மேற்கு வங்காளம்-பீகார் எல்லை அருகே ராகுல் காந்தி சென்ற காரின் பின்புற கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. யாரோ ஒருவர் கல் வீசியிருக்கலாம்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது. இதில்,
"தவறான செய்திகள் பற்றிய விளக்கம். மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுல்காந்தியை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் காந்தியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது.மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் தலைவர் ராகுல் காந்தி நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர், பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர்" என தெரிவித்துள்ளது.
தவறான செய்திகள் பற்றிய விளக்கம்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுல்காந்தியை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுல் காந்தியின் கார் முன் அவரை சந்திக்க வந்தார், இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட…
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 31, 2024