மகராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் மீது கல்வீசி தாக்குதல் - #ElectionCampaign நிறைவடைந்த நிலையில் பதற்றம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நிலையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்டில் 2ம் கட்டமாக 38 தொகுதிகளிலும் நாளை (நவ-20ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) ஆகியவை உள்ளடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவ சேனா (ஷிண்டே அணி) 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிடுகிறது. சிவசேனா உத்தவ் அணி 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி 86 இடங்களிலும் போட்டியிடுகிறது.
இதையும் படியுங்கள் : மணிப்பூருக்கு கூடுதல் படைகளை அனுப்பிய மத்திய அரசு – குகி அமைப்பை தடைசெய்ய #MeitiMLA -க்கள் முதலமைச்சருக்கு நெருக்கடி!
மகாயுதி கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். அதேபோல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்தனர். இந்நிலையில், நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத் பவார் தலைமையிலான என்.சி.பி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அனில் தேஷ்முக் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாக்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, அவரது காரின் மீது கற்கள் வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட தேஷ்முக் கட்டோல் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. "இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கி உள்ளதாகவும், தாக்குதலுக்கு காரணமானவர்களை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர்," என்றும் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதா தெரிவித்துள்ளார். தற்போது தாக்குதலுக்கு ஆளான அனில் தேஷ்முக்கின் மகன் சலில் தேஷ்முக், கடோல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.