நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் - நடைமுறைக்கு வந்த அபராத விதி!
தனியார் வாகனங்களில் விதிகளை மீறி தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுபவர் மீது அபராதம் என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் ஊடகம், காவல், மருத்துவர், வழக்கறிஞர், நீதிமன்றம், தலைமை செயலகம், ராணுவம் என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி கொண்டு பயணிக்கின்றனர்.
இது போன்று பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்ததில் அதில் பலர் போலியாக பல துறையின் பெயர்களை ஒட்டிக்கொண்டு பயணிப்பது தெரியவந்தது. குறிப்பாக குற்றச் செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் ஊடகம், வழக்கறிஞர் என்று சொல்லிக் கொண்டு சுற்றுவதும், அ வர்கள் இந்த பெயர்களை வைத்து தவறான பாதையில் செல்வதும் போலீசாரின் கவனத்திற்கு வந்தது.
இது போன்ற குற்றங்களை தவிர்க்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊடகம், மருத்துவம், காவல் என துறையின் பெயர்களை போலியாக ஒட்டக் கூடாது என கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்தனர்.
இதனையடுத்து வாகனத்தில் இருக்கும் தேவையற்ற ஸ்டிக்கர்களை அகற்ற வரும் 1-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் 2-ம் தேதி முதல், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்திருந்தது.
வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறியீடு பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் மோட்டார் வாகன விதிப்படி அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விதிமுறை இன்று அமலுக்கு வந்தது. இதன்படி இன்று முதல் அனுமதி இல்லாமல் ஏதேனும் இது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகண சட்டத்தின் படி ரூ. 500 அபராதம் விதிக்கபப்படும் எனவும் எச்சரிக்கையை மீறி வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகன ஓட்டிகள் அகற்றவில்லை என்றால் ரூ. 1500 அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளனர்.