தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உதவி!
தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளானோருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளது. மழைவெள்ளத்தினால் மக்கள் ஓரிடம் விட்டு இன்னொரு இடம் செல்லவேண்டிய அவசர நிலையை புரிந்துகொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுடைய துயரைத் துடைப்பதற்காக உடனடியாக உதவிகளை வழங்க தொடங்கியது. முழுமையான மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மழைவெள்ளத்தினால் மூழ்கிப் போன பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக, இந்நிறுவனம் படகுகளைப் பயன்படுத்தியது. அனைத்து மீட்பு நடவடிக்கைகளிலும் தேர்ந்த பயிற்சி பெற்ற வல்லுநர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டார்கள். உள்ளூர் மக்களுடைய பாதுகாப்புக்கும், நலனுக்கும் தான் இந்த மீட்புப் பணியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இந்தச் சவாலான பேரிடர் காலத்தில் வெள்ளப் பாதிப்புகளை சமாளிப்பதற்கு அத்யாவசியமான தேவை, உணவு. அதை உணர்ந்துகொண்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், தனது அணையா சமையல்கூடத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் 25,000 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறது. இதனை ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்களாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், உடனடியாகத் தேவைப்படும் நிவாரணப் பொருட்கள் கொண்ட பெட்டகங்களை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தேர்வு செய்து ஒழுங்குசெய்துள்ளதோடு, அவற்றை 10,000 பேருக்கு வழங்கி வருகிறது. இந்தப் பெட்டகத்தில், அத்தியாவசியப் பொருட்களான பிரெட், பால் பவுடர், பிஸ்கட்டுகள், குடிநீர், மெழுகுவத்திகள், முதலுதவி மருந்துகள் ஆகியவை அடங்கியுள்ளன. இதன்மூலம், இந்த இடர்காலத்தில் உடலுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்து, வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஏ.சுமதி, “மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இடர் காலங்களில் பொறுப்புள்ள கார்ப்பரேட் நிறுவனமாக நாங்கள் நிச்சயம் செயல்படுவோம் என்பதை மீண்டும் உறுதிபடக் கூறுகிறோம். மழை வெள்ளம் பாதித்த முதல் நாளான திங்கட்கிழமை முதலே, உதவி செய்யும் பணியில் குதித்த முதல் நிறுவனங்களில் ஒன்று ஸ்டெர்லைட் காப்பர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.