திருமலை கோயிலில் இந்துக்களை மட்டும் பணியமர்த்த நடவடிக்கை - முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது பேரன் தேவான்ஷ் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ரூ.44 லட்சம் தேவஸ்தான அன்னதான அறக்கட்டளைக்கு வழங்கினார். அன்னதானத்தின் போது குடும்பத்துடன் பக்தர்களுக்கு உணவு பரிமாறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு
நாயுடு,
“திருப்பதி வெங்கடேஸ்வர சாமியை மனதில் நிலைநிறுத்தி என் வாழ்க்கையில் முன் சென்று கொண்டிருக்கிறேன். என்னுடைய பேரன் தேவான்ஷ் பிறந்த நாட்களில் எங்களுடைய குலதெய்வமான ஏழுமலையானை வழிபடுவது வழக்கம். அந்த வகையில் ஏழுமலையானை இன்று வழிபட்டு தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு ஒரு நாள் செலவு தொகையாக 44 லட்ச ரூபாயை கொடுத்து அன்னதானம் செய்திருக்கிறோம்.
அன்னதானம் செய்வதன் மூலம் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. திருப்பதி மலையில் அன்னதான திட்டத்தை மறைந்த முதலமைச்சர் என்டி ராமராவ் ஏற்படுத்தினார். தேவஸ்தானத்தின் பிராணதான திட்டத்தை நான் அமலுக்கு கொண்டு வந்தேன். திருப்பதியில் உள்ள மருத்துவமனைகள் மூலம் ராயல் சீமா பகுதியில் இருப்பவர்களுக்கு சிறப்பான வைத்திய சிகிச்சை கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வோம்.
சர்வதேச அளவில் பணியாற்றும் மருத்துவர்கள் திருப்பதிக்கு வந்து மருத்துவமனைகளில் சேவை செய்து ஏழுமலையானை வழிபட்டு செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஏழுமலையான் கோயில் ஏழு மலைகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் இதற்கு முன் சிலர் ஐந்து மலைகள் மட்டுமே இங்கு உள்ளன என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு போராட்டங்களை நான் நடத்தினேன்.
மக்களுக்கு சேவை செய்யும் என்மீது 23 கிளைமோர் மைன்களை பயன்படுத்தி நான் திருப்பதி மலைக்கு செல்லும் போது மலை அடிவாரத்தில் தாக்குதல் நடத்தினர். ஆனால் அத்தகைய பெரும் தாக்குதலில் இருந்து என்னை ஏழுமலையான் காப்பாற்றினார். இதன் மூலம் ஏழுமலையானின் மகிமை அனைவருக்கும் புரிந்திருக்கும்.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் மும்தாஜ், எம் ஆர், தேவலோக் ஆகிய பெயர்களில் அந்தந்த நிறுவனங்கள் ஹோட்டல்களை கட்ட கடந்த காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பதி மலை அடிவாரத்தில் எவ்வித கட்டுமானங்களும் இருக்கக் கூடாது என்பதற்காக அந்த அனுமதியை இப்போது ரத்து செய்து இருக்கிறோம்.
திருப்பதி மலையில் வேற்று மதத்தவர்கள் பணியில் ஈடுபடாத வகையில் நடவடிக்கைகளை எடுப்போம். வெளி மாநிலங்களில் கட்டப்படும் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோயில்களை கட்டுவதற்காக புதிய அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்படும்.
அந்த அறக்கட்டளைக்கு கிடைக்கும் நன்கொடையுடன், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு கிடைக்கும் நன்கொடையும் சேர்க்கப்படும்” என்று கூறினார்.