”சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”- பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
”தூத்துக்குடி மாவட்டம், மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் போதிய நீர் இருந்தும் அந்த அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீர் தாமிரபரணி ஆற்று வழியாக ஸ்ரீ வைகுண்டம் வந்தடைகிறது. ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து அந்த நீர் வீணாக கடலில் கலக்க திறந்து விடப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பாக சாத்தான்குளம், உடன்குடி போன்ற பகுதிகள் வறட்சியின் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அந்த சமயத்தில் அனைத்து கட்சிகளும், விவசாய மக்களுக்கும் ஒன்று திரண்டு போராடி சாத்தான்குளம், உடன்குடி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று வரை தாகம் தணிந்து வந்தார்கள். அதைப் போல சடையநேரி கால்வாய்க்கு தண்ணீர் திறந்து, வறண்டு கிடக்கும் சாத்தான்குளம், உடன்குடி பகுதி விவசாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். வீணாக கடலில் கலக்க திறக்கப்படும் தண்ணீர், அந்தப் பகுதி விவசாயிகளுக்கு திறந்து விட பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத நீர்வளத்துறையையும், பொதுப்பணித்துறையும் வன்மையாக கண்டிக்கிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சாத்தான்குளம், உடன்குடி விவசாயிகளின் இந்த நிலைமை மாற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழை பெய்து வெள்ளத்தால் பழுதடைந்த ஆத்தூர் பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். விவசாயிகளின் நலனையும், இந்த பகுதி மக்களின் கோரிக்கைக்கும் தமிழக அரசு செவிசாய்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்