For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை தியாகராய நகரில் வணிக பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை எட்டு வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
01:54 PM Feb 18, 2025 IST | Web Editor
“தியாகராய நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”   சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Advertisement

சென்னை தியாகராய நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டிடத்துக்கு அனுமதி பெற்று விட்டு, அனுமதியை மீறி 10 தளங்கள் வரை கட்டிய ஜன்பிரியா பில்டர்ஸ் நிறுவனம், அனுமதின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்தது.

Advertisement

இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அரசிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கட்டிடத்துக்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழக அரசுகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், எட்டு வாரங்களில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தளங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது. வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

ஒருபுறம் கட்டிட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags :
Advertisement