"பள்ளிகளில் சுகாதாரமான கழிவறைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கு கட்டப்படுகின்ற கழிவறைகளில் அலட்சியப் போக்கை கடைபிடித்த பொதுப்பணித்துறை உடனடியாக முறையாக வரையறை மூலம் பாதுகாப்பான கழிவறையை அமைக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்கு என்று கட்டப்படுகின்ற கழுவறைகளுக்கு பொதுப்பணித்துறை நிதிகள் ஒதுக்கி கட்டுமான பணிகளை செய்து கொடுக்கிறது. ஆனால் அந்த பொதுப்பணித்துறையின் வரையறுக்கப்பட்ட வரைபடத்தில் கட்டுமான அமைப்பில் கழிவறைகளில் கழிப்பிட இடங்களுக்கு இடையில் தடுப்பு சுவர்கள் அமைக்க கட்டுமான வரைப்படத்தில் வரையறை இல்லை.
அதற்கான மதிப்பு தொகையும் குறிப்பிடவில்லை. இந்த வரையறையை பயன்படுத்தி பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமான பணியை மேற்கொள்கின்றனர். பொதுப்பணித்துறை குறிப்பிட்ட தொகையில், குறிப்பிட்ட வரைபட வரையறையில் கழிப்பிட இடத்தில் தடுப்புகள் இல்லாமல் இதுநாள் வரை பணியை செய்து வந்து அது பயன்பாட்டில் உள்ளது.
இந்த பொதுப்பணித்துறையின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தை சார்ந்த பொறியாளர்கள் இவ்வாறாக பள்ளிகளில் கழிவறைகளை கட்டி உள்ளனர். தற்போது தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் பொதுப்பணித்துறை வழிகாட்டுதலை பின்பற்றி அந்த பேரூராட்சி செயல் அலுவலரும், பேரூராட்சி பொறியாளரும் அந்த பகுதி பள்ளியில் பெண் பிள்ளைகளுக்கு கழிவறையை பொதுப்பணித்துறை கட்டிட வரையறையை கொண்டு கட்டட ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமான பணி முடித்தனர். அதன் திறப்பு விழாவின் போது அந்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு தான் இந்த கழிவறை பற்றி செய்தி பத்திரிகைச் செய்திகள் மூலம் பலருக்கு தெரிய ஆரம்பித்தது. அதுவரை பெண்கள் கழிப்பிடம் என்பதால் இதைப் பற்றி யாரும் முறையாக இதுவரை தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தது. பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும் கழிப்பறை சங்கடம் பற்றி பொதுவெளியில் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆடுதுறை கழிப்பிட திறப்பு விழாவின் போது வெளிவந்த புகைபடத்தை பார்த்து தான் தமிழகம் முழுவதும் மக்கள் கழிப்பிட அமைப்பை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகி விமர்சனங்கள் வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஏதோ ஆடுதுறை பேரூராட்சியில் மட்டும் இவ்வாறு தவறு நடந்து விட்டதாக எண்ணி அந்த பேரூராட்சியின் செயல் அலுவலரையும், பொறியாளறையும் பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால் தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான பள்ளிகளில் பெண் பிள்ளைகள் கழிப்பறைகள் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட்டுள்ளன.
இந்த கழிப்பறைகள் ஆடுதுறை பள்ளி கழிப்பறை போன்று தான் உள்ளன என்று பல சமூக சிந்தனையாளர்கள், ஆசிரியைகள் கருத்தை வெளிபடுத்தியுள்ளனர். தமிழக அரசு உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படுகின்ற கழிவறைகளில் கழிப்பிடம் முறையாக தடுப்புகளை வைக்க போதிய நிதியை ஒதுக்கி கழிவறைகளை கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும். பொதுப்பணித்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு பள்ளியில் கழிப்பறை கட்டிய ஆடுதுறை செயல் அலுவலர் மற்றும் பொறியாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.
முறையான பாதுகாப்பான கழிப்பறைகளை அமைக்க புதிய வரையறையை உடன் வரைபடம் உருவாக்கம் செய்து அதன் மூலம் முழுமையான சுகாதாரமான கழிவறைகளை பள்ளிகளில் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.