மாநில அளவிலான சிலம்ப போட்டி - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்!
பேரையூர் அருகே சாப்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளின் போட்டிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்
இராஜராஜசோழன் சிலம்பாட்ட குழுவினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் மாநில
அளவிலான சிலம்பாட்ட போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தேனி, திருச்சி, ஓசூர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரளாவிலிருந்தும் 300க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
6 முதல் 8 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 9 முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 13 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 16 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும், 19 வயதுக்கும் மேற்பட்டோர் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் பரிசாக 7 அடி உயர கோப்பையையும், சான்றிதழ்களையும் கமுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வென்றனர். இரண்டாம் பரிசாக 6 அடி உயர கோப்பை மற்றும் சான்றிதழை மதுரையைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், 3வது பரிசாக 5 அடி உயர கோப்பை மற்றும் சான்றிதழை திருச்சியைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் வென்றனர்.
மேலும், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது
குழுக்களுக்கு கிராம மக்கள் பரிசுகளை வழங்கி கௌரவபடுத்தி பாராட்டினர்.