#HarishKalyan-க்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை?
வினீத் வரபிரசாத் இயக்கத்தில் இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே, கடந்த சில தினங்களாகவே கவின் நடிப்பில் வெளியான 'லிப்ட்' படத்தின் இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுவரை இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் படம் தொடர்பான அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. நடிகை பிரீத்தி முகுந்தன், கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.