"நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒரு சீரியல் ஷோ" - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், உரிமை மீட்க தலைமுறை காக்க எனும் தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டார். ஆற்காடு பைபாஸ் சாலையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை நடைபயணம் மேற்கொண்டவர், பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றினார்.
அப்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற பெயரில் இன்று தொடங்கியுள்ள திட்டம் வெறும் சீரியல் ஷோ என விமர்சித்தார். யார் நலனை காக்க போகிறீர்கள், தமிழக மக்களின் நலனை காக்க போகிறீர்களா என கேள்வி எழுப்பிய அவர், சாராயம், கஞ்சா விற்பவர்களின் நலனை பாதுகாப்பதாக தெரிவித்தார். தெருக்கள் தோறும் உள்ள சாராயக் கடைகளை மூடினால் தமிழக மக்கள் நன்றாக இருப்பார்கள் ஆனால் அதனை செய்ய தமிழக அரசுக்கு துப்பில்லை என பேசினார்.
உங்களுடன் ஸ்டாலின், அவர்களுடன் ஸ்டாலின், இவர்களுடன் ஸ்டாலின் என சீரியல் தொடரை போல 2 மணி நேரம் ஷூட்டிங் நடைபெறுகிறது. ஆனால் அதை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். அது அந்த காலம், தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லாததை சரிசெய்யாமல் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடத்த திட்டமிடுகின்றனர். திமுக அரசு கொடுத்த 541 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு 100%, 120% என 700 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்கின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தி வரும் சூழலில் தமிழகத்தால் ஏன் முடியவில்லை என கேள்வி எழுப்பினார். சாதிவாரி கணக்கெடுப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் என தமிழகம் செய்ய விரும்பாத விவகாரங்களில் கண்துடைப்புக்காக குழுக்களை மட்டுமே அமைப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை கூட மதிப்பது இல்லை எனவும், இந்த திமுக அரசு டிராமா கோஷ்டி என குற்றஞ்சாட்டியதோடு, தரவுகளின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பில் உள்ஒதுக்கீட்டை கூட வழங்கவில்லை என விமர்சனம் செய்தார்.