”உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் ஸ்டாலின்” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்...!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப் பயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்று விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது மக்களின் காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தின் மூலம் முன்னுரை எழுதியுள்ளார். நாங்கள் எங்களுடைய பயணமான தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் மூலம் முடிவுரை எழுத உள்ளோம்.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தப்படி மின் கட்டண கணக்கிடும் முறையை மாதந்தோறும் மாற்றுவோம் என கூறினர் ஆனால் இதுவரை நடைபெறவில்லை மாறாக தனது மகன் உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார். கோவையில் நடைபெற்ற சம்பவத்தால் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் எந்த அளவுக்கு மன வேதனை அடைந்துள்ளனர் என்பதை சட்டம் ஒழுங்கு கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு தெரியவில்லை. விரைவில் தமிழக மக்கள் இந்த அரசுக்கு முடிவுரை எழுத உள்ளனர். இந்த பயணத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் அளிக்கும் மனுக்கள் மத்திய அரசு அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றால் உடனடி தீர்வு காணப்படும். மேலும் காரமடை கருவேப்பிலைக்கு இன்னும் இரண்டு வாரங்களில் புவிசார் குறியீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.