For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்!” - எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

09:54 PM Jun 21, 2024 IST | Web Editor
“கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான் ”   எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் முழக்கமிட்டபோது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த ஸ்டாலின், பேரவைத் தலைவர் எங்களை வலுக்கட்டாயமாக அராஜகப் போக்குடன் வெளியேற்றிய பிறகு வந்து, தான் "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடி, கள்ளச்சாராய மரணங்கள் குறித்த முற்றிலும் ஏற்கத்தகாத ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

அஇஅதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று திமுக முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது. சென்ற ஆண்டு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிறகாவது, இந்த திமுக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கள்ளக்குறிச்சியில் இச்சோகம் நிகழ்ந்திருக்காது. எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு முழு பொறுப்பு ஸ்டாலின் தான்.

மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது வந்து "நான் அதிகாரிகளை மாற்றிவிட்டேன்" என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம். மக்கள் நலன் ஒன்றே அதிமுகவின் அரசியல் ஆதாயம். அந்த ஆதாயம் நிறைவேற நாங்கள் அனைத்து ஜனநாயக வழிகளிலும் போராடுவோம். 18.02.2017 அன்று நீங்கள் சட்டப்பேரவையில் அரங்கேற்றிய அராஜகம், தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டிராத ஜனநாயகப் படுகொலை.

ஜனநாயக மாண்பைப் பற்றி பேச திமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை. நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா? மனசாட்சி என்பது கொஞ்சமும் இருந்தால் ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் ! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement