மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு!
சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படாது. அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.