#SriLankaPresidentialElection2024 | அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!
இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார்.
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3 ஆண்டுகளில் ஆட்சியை பறிகொடுத்தது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த இலங்கை மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதன் எதிரொலியாக அதிபர் பதவியை ராஜினாமா செய்த கேத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார்.
அதன் பின்னர் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.எனவே இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது.அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மக்கள் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்கு எண்ணிக்கையையொட்டி நாளை காலை 6 மணி வரை இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளும் அதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். 60.83 சதவிகித வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 21.06 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளார்.