For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#SrilankaPresidentElection2024 | ஆழமான நட்பின் அடையாளம் தொடருமா?

11:43 AM Sep 23, 2024 IST | Web Editor
 srilankapresidentelection2024   ஆழமான நட்பின் அடையாளம் தொடருமா
Advertisement

உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. அதிபர் பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச, பொது வேட்பாளராக அரியநேத்திரன்உள்ளிட்ட 38 பேர் போட்டியிட்டனர்.

நிலையற்ற ஆட்சி, கடும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே அதிபர் தேர்தல் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன் பதிவான வாக்குகளும் உடனடியாக எண்ணப்பட்டன.

Advertisement

தேர்தல் முடிவில் ட்விஸ்ட் கொடுத்த இலங்கை மக்கள்!

இலங்கை அதிபர் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசா அல்லது நமல் ராஜபக்ச ஆகியோரில் ஒருவர் வெற்றி பெறுவார் என்று உலக நாடுகள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது இலங்கை மக்கள் புதிய ட்விஸ்ட் கொடுத்து உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்தனர்.

இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், இமாலய வெற்றி பெற்றார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க. இவர் கம்யூனிஸ்ட் கட்சி என கருதப்படும் ஜனதா விமுக்தி பெரமுணாவின் தலைவர். இதன் மூலம், இலங்கையில் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்பு மற்றும் பெருமையைப் பெற்றார் அனுர குமார திசநாயக்க. தொடர்ந்து இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக்க இன்று காலை பதவியேற்றார்.

அனுர குமார திசநாயக்க-வின் செயல்பாடு எப்படி இருக்கும்? உற்று நோக்கும் உலக நாடுகள்!

இலங்கையின் 9-வது அதிபராக பதவிறேற்ற அனுர குமார திசநாயக்க-வின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? இந்தியா உடன் எந்தவகையான நட்புறவை பேணுவார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்ற நிலையில், சர்வதேச அரசியலை கூர்மையாக கவனித்து வருவோர் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? ஜனதா விமுக்தி பெரமுணா சிங்கள பேரினவாதத்தை தீவிரமாக கடைபிடிக்கக் கூடிய கட்சி. அதாவது, சிங்களத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், சிங்களத்தவர்கள், இந்தியாவை விட சீனாவை அதிகம் நம்புபவர்கள். ஏற்கனவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட நம்பிக்கையான அரசு இலங்கையில் அமைய வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கம். இதனை பூர்த்தி செய்யும் வகையில் முன்பு ராஜபக்ச அரசு அமைந்தது. ஆனால், அதற்கு பிறகு முழுக்க முழுக்க சீன ஆதரவு நிலைப்பாடுடைய அரசு இலங்கையில் அமையாமல் இருந்தது. ஆனால், இந்த நிலையை தற்போதையை தேர்தல் முடிவு மாற்றியிருக்கிறது.

தற்போதைய இலங்கை அரசியல் சூழல் சீனாவுக்கு சாதகமாகவே இருக்கும் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அனுர குமார திசநாயக்க புதிய அதிபராக பதவியேற்றிருப்பது சீனாவிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் கணிக்கின்றனர்.

இந்தியா - இலங்கை நட்புறவு - என்ன ஆகும்?

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு, அண்டை நாடான இந்தியாவினான நட்புறவை விடாது என கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது வரலாற்று, கலாச்சார, பொருளாதாரரீதியில் ஆழமான பிணைப்பைக் கொண்டது.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று தொடர்புகள் மிகவும் சிறப்பான முறையில் பேணப்பட்டு வருகின்றன. கலாசாரரீதியாக, இந்தியாவும் இலங்கையும் மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மத நடைமுறைகளில் பொதுவான தன்மைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பரஸ்பர கலாசார நடைமுறைகளால் செழுமையடைந்த இரு நாடுகளாக இவை திகழ்கின்றன.

பொருளாதாரரீதியாக, இரு நாடுகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக தொடா்ந்து வரும் வா்த்தக உறவுகள் முக்கியத்துவம் வகிக்கின்றன. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே, கூட்டு முயற்சிகள், முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன் கூடிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான தேவை பரந்த அளவில் உணரப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, கடலோரப் பகுதிகள் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்றவற்றில் இணைந்து செயல்படும் திறனை எளிதாக்கியுள்ளது. கி.மு.3-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பௌத்த மதம் பரவியதில் இருந்து, இந்தியாவும் இலங்கையும் நீண்டகால வரலாற்று, கலாச்சார உறவைப் பேணி பாதுகாத்து வருகின்றன. பௌதத்தின் வருகை இரு நாடுகளுக்குமிடையே ஆழமான ஆன்மிக மற்றும் கலாச்சாரத்துக்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. மேலும் இருதரப்பு வர்த்தகம் அண்மை ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.

1998-ல் கையெழுத்தான இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (The Indo-Sri Lanka Free Trade Agreement-ISFTA), இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது வா்த்தக ஒப்பந்தமாக பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இந்த ஒப்பந்தம் பலதரப்பட்ட பொருட்களின் மீதான சுங்க வரிகளை குறைக்க அல்லது நீக்கி, அதன் மூலம் சுமூகமான வர்த்தக உறவுகளை மேம்படுத்த வழிவகுத்தது.

இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (Foreign direct investment – FDI) முக்கிய ஆதாரமாகவும் இந்தியா உள்ளது. இந்த முதலீடுகள் இலங்கைக்குள் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி உட்பட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் மற்றொரு முக்கிய அம்சமாக சுற்றுலாத்துறை பாா்க்கப்படுகிறது. சுற்றுலாத்துறை இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் வழிசெய்கிறது.

நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு நம்பகமான கூட்டாளியாக இருந்ததில் இந்தியா தனது அர்ப்பணிப்பை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறது. அண்டைநாட்டவர்களுக்கு முன்னுரிமை (Neighbourhood First Policy) என்ற இந்தியாவின் கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

பாதுகாப்புத் துறைக்கான ஒத்துழைப்பு, கூட்டு ராணுவ பயிற்சிகள், மற்றும் இரு நாடுகளுக்கிடையே உளவுத்துறை பரிமாற்றங்கள் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பரஸ்பர ஒத்துழைப்பு பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் இரு நாடுகளின் திறன்களை மேம்படுத்த உதவுகிறது.

இந்தியாவும் இலங்கையும் கல்விப் பரிமாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்றவற்றில் மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளன. தரமான கல்வியை விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்கள் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான கல்வி உறவுகளை நிறுவ வழிவகுத்தது. மேலும், தொழில்நுட்பத் துறையில், தகவல் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியல் ஆராய்ச்சி போன்ற துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

ஒருவருக்கொருவர் நிபுணத்துவம் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் பயனடையலாம், இது இரு நாடுகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஒட்டுமொத்தமாக, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு ஆழமான வரலாற்றுத் தொடர்புகளினாலும், பரஸ்பரம் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களினாலும் நிரம்பியுள்ளது. இரு நாடுகளும், அண்டை நாடுகளாக, தங்கள் பிணைப்பை வலுப்படுத்திக் கொண்டு பரஸ்பர நன்மைகளை அடைந்துக் கொள்ளும் ஆற்றல்களைக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் புவியியல் அமைவிடம் மற்றும் வரலாற்று உறவுகள், பிராந்தியத்தில் ஒரு வலுவான கூட்டாண்மைக்கு சிறந்த அடித்தளத்தை வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில், புதிய அதிபராக பதவியேற்ற அனுர குமார திசாநாயக்க-வின் செயல்பாடுகளால் இந்தியா - இலங்கை இடையிலான நட்புறவு எப்படி இருக்கும் என்பது போகப்போக தெரியும்...

Tags :
Advertisement