“#Srilanka அதிபர் தேர்தலில் அரியநேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும்” - திருமாவளவன்!
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்திக்கும் முதல் தேர்தல் இது.
இத்தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் உட்பட 38 பேர் போட்டியிடுகின்றனர். 42 ஆண்டு கால இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல்முறை. இதில் ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து இன்று இரவு 7 மணிமுதல் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில், பொது வேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்கியுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது அரியநேந்திரனுக்கு தமிழ் மக்கள் அளித்த வரவேற்பும், பேராதரவும் இலங்கை கட்சிகளிடையே சற்று அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது என தெரிய வருகிறது.
தமிழர்களிடையே காணப்படும் இத்தகைய ஒற்றுமையும், எழுச்சியும் மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தமிழர்களின் பொது வேட்பாளர் போராளி அரியநேந்திரன், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவர். அத்துடன், அவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழ விடுதலைப் போராளியான தோழர் அரியநேந்திரன் இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால், இலங்கை பௌத்த பேரினவாதிகளின் தொடர் ஒடுக்குமுறைகளிலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்க முடியும்.
ஆகவே அரியநேந்திரனுக்கு ஈழத் தமிழ்சொந்தங்கள் அனைவரும், ‘சங்கு’ சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம். போர்க்களத்தில் நம்மை வீழ்த்திய இனவெறிப் பகைவர்களைத் தேர்தல் களத்தில் நாம் தோற்கடிப்போம். தமிழின விரோத
இலங்கைத் தலைமைகளோடு தொடர்ந்து, தமிழீழத்தைச் சிதைக்கத் துடிக்கும் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் ஆதிக்கத்தைத் தகர்த்து தமிழீழ தனித்துவத்தை நிறுவுவோம்”
இவ்வாறு திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.