For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி - இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும், பின்னணியும்!

01:45 PM Nov 12, 2023 IST | Web Editor
இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி   இதற்குமுன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அணிகளும்  பின்னணியும்
Advertisement

அரசாங்கத்தின் தலையீடு காரணமாக ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தில் இலங்கை இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி. அதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளெல்லாம் நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் உயிர்பெற்றுள்ளன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு!..

Advertisement

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி - உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு விதிமுறைகளை வகுத்து வழி நடத்தி வருகிறது. ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியின் அடிப்படை விதி முதல், ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட விதி வரை ஐசிசியின் விதை இருந்திட கூடும். ஒரு அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் ஐசிசியின் முழுமையான உறுப்பினராக அல்லது இணை உறுப்பினராக இருந்திட வேண்டும். ஐசிசியில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ், அந்நாடுகள் எடுக்கும் முடிவுகளுக்கு ஐசிசி ஒப்புதல் அளிக்கும். ஐசிசியின் விதிமுறைகளை மீறினால் அதற்கு வெகுமதியாக அந்த குறிப்பிட்ட நாடானது, ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தை இழந்திட கூடும். இவ்வாறு விதிகளை மீறியதால் தான், தற்போது சிக்கலை சந்தித்து வருகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் படு மோசமான திறன் காரணமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது இலங்கை அணி. இதனை ஏற்க முடியாத இலங்கை அரசாங்கம், நேரடியாக களத்தில் குதித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து, அதை நிர்வகிக்க 7 பேர் கொண்ட குழுவையும் தற்காலிகமாக அமைத்தது. இதுகுறித்து ஐசிசியிடம் ஆலோசனை செய்யாமல், விதிகளுக்கு புறம்பாக குழு அமைக்கப்பட்டதால், ஐசிசி உறுப்பினர் விதிகளை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை உறுப்பினர் உரிமத்தில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி.

இந்தச் செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐசிசிசியின் உறுப்பினர் உரிம விதிகள் மீதான தெளிவையும் விழிப்படைய செய்துள்ளது. இது இப்போது தான் முதல் முறையா என்ன? இதுவரை எந்தெந்த நாடுகள் எவ்வாறு ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தை இழந்து, மீண்டும் இணைந்துள்ளன?

  • கடந்த 1970-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்களுக்குள், நிறவெறி அரசியல் பாகுபாடு காரணமாக ஐசிசியின் உறுப்பினர் அந்தஸ்தை பறிகொடுத்தது. அதன்பின் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிர்வாகத்தை சீரமைத்த தென்னாப்பிரிக்கா, 1991-ம் ஆண்டு மீண்டும் ஐசிசியின் உறுப்பினரானது.
  • கியூபா நாடு, கடந்த 2013-ம் ஆண்டு ஐசிசியின் விதிகளுக்குட்பட்டு சரியான முறையில் தங்கள் நிர்வாகத்தை கட்டமைக்க இயலாத காரணத்தால் ஐசிசியின் உறுப்பினர் உரிம ஒப்பந்தத்தில் இருந்து தானாகவே விலகிக்கொண்டது.
  • ஸ்விட்சர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் 2012-ம் ஆண்டு ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக உறுப்பினர் உரிமத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதன் பின்னர் 2015-ம் ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டது.
  • 2000-ம் ஆண்டு முதல் டோங்கா நாடு ஐசிசியின் உறுப்பினர் உரிமம் பெற்று விளையாடி வந்த நிலையில், 2014-ம் ஆண்டு உறுப்பினர் நாடுகளுக்கான அடிப்படை செயல்பாடுகளை தொடராததால் உரிமத்தில் இருந்து நீக்கப்பட்டது.
  • 1992-ம் ஆண்டு முதல் ஐசிசியின் இணை உறுப்பினராக செயல்பட்டு வந்த ஆசிய நாடான புருனே தாருஸ்ஸலாம், 2014-ம் ஆண்டு உறுப்பினர் உரிமத்தில் இருந்து நீக்கப்பட்ட காரணத்தால், தானாகவே தங்களது கிரிக்கெட் வாரியத்தை கலைத்துக் கொண்டது.
  • ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2019-ம் ஆண்டு அரசாங்கத்தின் தலையீடுகளின் காரணமாக ஐசிசி உறுப்பினர் உரிமத்தில் இருந்து நீக்கப்பட்டு, ஐசிசியுடனான மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் இணைக்கப்பட்டது.
  • ரஷ்யா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் கடந்த 2021-ம் ஆண்டு ஐசிசியின் உறுப்பினர் நாடுகளுக்கான அடிப்படை செயல்பாடுகளை சரிவர தொடராததால் ஐசிசி உறுப்பினர் உரிமத்தில் இருந்து நீக்கப்பட்டன.

அதற்கு பிறகு நடப்பு ஆண்டு இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசினுடைய தலையீட்டால், ஐசிசி உறுப்பினர் உரிமத்தில் இருந்து இலங்கையை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது ஐசிசி. மேலும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இனி அரசின் தலையீடுகள் இன்றி, விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையான வடிவமைப்பை பெற்றால் மட்டுமே ஐசிசியின் உறுப்பினர் உரிமத்தில் மீண்டும் இணைந்திட முடியும்.

அதுவரை அந்நாட்டு ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடலாம் எனவும் ஐசிசி உறுப்பினர் நாடுகளுடன் விளையாட, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உரிமை இல்லை எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement