உலக கிரிக்கெட்டில் ஆசிய நாடுகளான நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதிக்கம் ஒருபுறம் அதிகரித்து வரும் அதே நேரம், ஒரு சாம்பியன் அணியின் வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான் கிரிக்கெட் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாபிக். டி20 லீக் கிரிக்கெட் தொடர்கள் மூலம் சமீப காலமாக பல்வேறு நாடுகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு நல்லதொரு உதாரணம் நேபாளம் அணியின் வளர்ச்சி தான்.
நேபாளம், அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இணைந்து நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றிருப்பது பாராட்டத்தக்க ஒன்று. 2021-ம் ஆண்டு கணக்கீட்டின் படி 3 கோடி மக்கள் தொகை கொண்டிருக்கக் கூடிய ஒரு சிறிய நாடு, உலக அரங்கில், ஒரு பெரிய விளையாட்டின் மூலம் அடையாளம் பெறப்போவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆசிய கண்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு அணியின் வீழ்ச்சி, கிரிக்கெட் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறது.
இந்த சிக்கலில் திகைத்திருப்பது இலங்கை கிரிக்கெட் அணி தான். சர்வதேச கிரிக்கெட் அரங்கில், புள்ளி விவரங்களில் இலங்கை வீரர்களின் தாக்கம் இன்றும் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. மஹீலா ஜெயவர்தனே, அர்ஜுனா ரனதுங்கா, முத்தையா முரளிதரன், சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா, சமிந்தா வாஸ், மறவன் அட்டப்பட்டு, அரவிந்த டி சில்வா, அஜந்தா மெண்டிஸ் என பல சாம்பியன் கிரிக்கெட்டர்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வெளியேற்றமே மிகப்பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் வீழ்ச்சி மேலும் அதிர்ச்சியை கூட்டியிருக்கிறது.
1996-ம் ஆண்டு அர்ஜுனா ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதற்கு பிறகு 2011-ம் ஆண்டு இரண்டாமிடம் பிடித்திருந்தது இலங்கை. இத்தகைய சீரியஸான கிரிக்கெட் விளையாடி வந்த இலங்கையின், நடப்பு உலகக் கோப்பை தொடரின் ஃபார்ம் என்பது முற்றிலுமாக அவுட் ஆப் ஃபார்மாக மாறிவிட்டது.
சமீபகாலமாக இலங்கை அணியின் விளையாட்டில் முன்னேற்றம் இல்லாததை அடுத்து கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ஜிம்பாப்வேயில் நடைபெற்று முடிந்த தகுதிச்சுற்று தொடரில் விளையாட நேர்ந்தது. தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி தொடர்ந்து 8 வெற்றிகளை பதிவு செய்து சாம்பியன் பட்டம் வென்றதுடன், நடப்பு உலக கோப்பை தொடருக்கு தகுதியும் பெற்றது. ஆனால் பெரிய களத்தில் இலங்கையின் போராட்ட குணம் நீடிக்கவில்லை. மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இலங்கை அணி, நவம்பர் 5-ம் தேதி வரை விளையாடிய 7 போட்டிகளில் 5 இல் தோல்வியும் 2 ல் மட்டுமே வெற்றியும் பதிவு செய்திருந்தது. குறிப்பாக இந்தியாவுடனான போட்டியில் 358 ரன்கள் இலக்கை துறத்த முயன்ற இலங்கை, 55 ரன்களில் சுருண்டது. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை மறக்கச் செய்து பதிலடி கொடுக்கும் என நினைத்த ரசிகர்களுக்கெல்லாம் மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. தொடர் தோல்வியால் இந்த நிகழ்வு பூதாகரமாக வெடிக்க, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்பு போராட்டத்திற்காக ரசிகர்கள் குவிந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்ட சம்பவங்கள் வரை நிகழ்ந்துள்ளது.
இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாத இலங்கை நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் மோகன் டிசில்வா கடந்த சனிக்கிழமை தனது பதவியை, தானாகவே முன்வந்து ராஜினாமா செய்துள்ளார். மோகன் டிசில்வாவின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவராக முன்வந்து அதை செய்தாரா அல்லது அதன் பின்புலத்தில் ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா என விவாதங்கள் எழுந்தன. இவைகளெல்லாம் ஓய்வதற்குள்ளாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தை அதிரடியாக கலைத்தது அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சகம்.
அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்கே வெளியிட்ட அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளை கண்டுகொள்வதில்லை, ஊழல் நிறைந்த நிர்வாகம், சீரற்ற நிதி மேலாண்மை மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் உள்ளிட்ட பல விவகாரங்களில் மோசமான கட்டத்தில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ஊழல் நிறைந்த கிரிக்கெட் வாரியமாக இலங்கை இருக்கிறது என ஐசிசி வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
எனவே இந்த சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரணசிங்கே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க உத்தரவிட்டதை அடுத்து, இதனை விசாரிக்க தற்காலிகமாக 7 பேர் அடங்கிய குழுவினை அறிவித்தார். இந்த குழுவில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் இமாம் மற்றும் ரோகிணி, உயர்நீதிமன்ற நீதிபதி இராங்கனி பெரேரா, 1996 உலகக் கோப்பை வென்ற கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
நீண்ட குழப்பத்திற்கு மத்தியில், இலங்கை அரசின் இந்த செயல்பாடு நாடு முழுவதும் ஒருவித திருப்தியை ஏற்படுத்துமா என்பது அடுத்தடுத்து நகர்வுகளை பொறுத்து தான் அமையக்கூடும். இந்த இடைக்கால குழுவினுடைய தீவிர விசாரணைக்கு பிறகான தீர்வு உலகக் கோப்பைக்கு பிறகான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை புதிதாக அமைக்கச் செய்து சிறப்பாக்குமேயானால், புதிய நிர்வாகத்தின் கீழ் இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் உயிர்பெறுமா என காலம்தான் பதில்சொல்லும்.
- நந்தா நாகராஜன்.