SRHvsDC | பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி அணி - ஹைதராபாத்துக்கு 134 ரன்கள் இலக்கு!
நடப்பு ஐபிஎல் தொடருக்கான லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி, அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி அணியை இன்று(மே.05) எதிர் கொண்டு வருகிறது. ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டெல்லி அணியில் தொடக்க வீரர் கருண் நாயர் டக் அவுட்டாக அவரைத் தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸ் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவருக்கடுத்து வந்த அபிஷேக் போரெல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கே.எல். ராகுல் 10 ரன்கள் அடித்து தனது விக்கட்டை பறிகொடுத்தார். அதன் பின்பு வந்த கேப்டன் அக்சர் படேலும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி தொடக்கத்திலேயே பேட்டிங்கில் சொதப்பி 5 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 29 ரன்கள் அடித்து தடுமாறி வந்தது. அதன் பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் தங்கள் பங்கிற்கு தலா 41 ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு எதிராக குறைந்த பட்ச இலக்கை தேற்றினர்.
அதன்படி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 133 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 134 என்ற இலக்கை ஹைதராபாத் அணி சேஸிங் செய்ய உள்ளது.