மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அலர்ட்!
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில், பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும், ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்டிராவில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஜிகா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புனேவில் கர்ப்பினிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகள் அனைத்தையும் கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும். கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, மூட்டு வலி 7 நாட்களுக்கு நீடித்தால், மக்கள் டாக்டரை அணுக வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.