'அனுமதியின்றி பள்ளிகளில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது' - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் #Madhumathi உத்தரவு!
கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ. மதுமதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மகாவிஷ்ணு என்பவர் தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியிருக்கிறார். யாருடைய அனுமதியில் இது போன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள் என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு என்ற நபர் மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது தமிழ்நாடு கல்வித்துறையிலும், தமிழ்நாடு அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இன்று காலை அந்த பள்ளியின் முன் கூடினர். மேலும், மூடநம்பிக்கையை வளர்க்கும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் மகாவிஷ்ணு மூலம் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது குறித்து பள்ளி பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சோ.மதுமதி தெரிவித்துள்ளார். கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படியுங்கள் :வசூல் வேட்டையில் இறங்கிய #GOAT | முதல்நாளே இத்தனை கோடியா?
ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்ற இரண்டு பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட கல்வி அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது போன்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையால் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான அவசரக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.