ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சி - செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்!
சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்துச் செல்லும் பைக்காரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரியில் மிகச்சிறந்த சுற்றுலா
தலங்களில் ஒன்றான பைக்காரா நீர்வீழ்ச்சி, உதகையிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது . இதனை கண்டு
ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம்.
இந்நிலையில் நீலகிரியில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால், பைக்காரா நீர்வீழ்ச்சியில் குறைந்த அளவிலான தண்ணீர் கொட்டியது. இதனால், நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம்
அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் கடந்த சில
நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக மூக்குருத்தி தேசிய பூங்காவின்
அடிவாரத்தில் அமைந்துள்ள அவளாஞ்சி, போர்த்தி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி,
பைக்காரா உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளதால் அணைகளில்
நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர துவங்கி உள்ளது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனையடுத்து, உதகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தும், செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர்.