"உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு!
உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு தான திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மறைந்த பிறகும் பலரை வாழ வைக்க முடியும். இதனைதொடர்ந்து கடந்த ஆண்டு செப்.23ம் தேதி உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் உறுப்பு தானம் தொடர்பாக அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.