தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தீபாவளி திருநாளில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அம்மனுக்கு வைர கிரிடமும், தங்ககவசம் சாத்தியும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தியும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் தீபாவளிக்கு கடும் கட்டுப்பாடு: விதிகளை மீறினால் சிறை!
மேலும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. பண்டிகை தினம் என்பதால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனையும், சுவாமியையும் தரிசனம் செய்வதற்கு காலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில், அழகர்கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலுமே பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.