அக்டோபரில் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம்?
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையமானது, பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தம் நடத்தியது. ஆனால் அந்த தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது என்றும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று இந்திய தலைமைத் தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிகாரைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின்படி, நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை நடத்தவும், அக்டோபர் மாதத்திற்குள் இதற்கான பணியை தொடங்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகார் மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டன. இந்த நிலையில் நாடு முழுவதும் திருத்தம் மேற்கொண்டால் பெரிய அளவிலான எதிர்ப்புகள் எழும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.