கரும்பு உழவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இன்று 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதில் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்ய புதிய திட்டங்களை அறிவித்தார். கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, தென்னை பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
1. முன் எப்போதும் இல்லாத அளவில், கரும்பு டன் ஒன்றுக்கு 349 ரூபாய், சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் கரும்புக்கு, டன் ஒன்றிற்கு 3,500 ரூபாய் வழங்கப்பட்டு, சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
2. “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்னும் புதிய திட்டம் தமிழ்நாட்டில் 2025-2026ஆம் ஆண்டில் 125 கோடி ரூபாய் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
3. தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
4..பப்பாளி, கொய்யா எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய பழச்செடித் தொகுப்புகள் ஒன்பது லட்சம் குடும்பங்களுக்கு, 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
5. புரதச்சத்து நிறைந்த மரத்துவரை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகளை இல்லம்தோறும் வளர்க்கும் பொருட்டு பயறுவகை விதைகள் அடங்கிய தொகுப்பு ஒரு லட்சம் இல்லங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
6. ஐந்துகாளான் உற்பத்திக்கூடங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும்.
7. காய்கறிகளை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்திட 4,000 நடமாடும் விற்பனை வண்டிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
8. ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித்திட்டம் மொத்தம் 35 கோடியே 26 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.