"வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள்" - அமைச்சர் #MaSubramanian பேட்டி
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
"வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 62,000-க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழைக்காக 62,000-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. அக்டோபர் 1ம் தேதி முதல் தற்போதைய நிலவரப்படி 62,627 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம்
சுமார் 34 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 5,556 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இசிஜி, எக்ஸ்ரே போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் இறுதி மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப ஜனவரி மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது.
அங்கு, மழையால் சேதமடைந்திருந்த மருத்துவ உபகரணங்களை மாற்றி விட்டோம். தமிழ்நாட்டில் வேறு எந்த மருத்துவமனையும் மழையால் பாதிப்புக்குள்ளாகவில்லை. பல்லாவரம் பகுதியில் தற்போது வரை கழிநீர் கலந்த குடிநீரை அருந்திய 2 பேர் மட்டும் தான் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அந்தக் குடிநீரின் மாதிரிகள் சென்னை கிங் இன்ஸ்டியூட் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்க செய்யப்பட்ட சோதனை மூலம் அந்த குடிநீரில் 'விப்புரியோ காலரே' என்ற காலரா பாதிப்புக்கு ஏற்ற கிருமி இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த குடிநீரில் வேறு ஏதேனும் கிருமிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு எவ்வளவு நபர்கள் வருவார்கள் என்பது குறித்து அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்க உள்ளோம். கடந்த ஆண்டைவிட இந்த முறை கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க உள்ளோம்"
இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.