“பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசத்துரோகம்” - ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட இளைஞர் அடித்தே கொல்லப்பட்டது குறித்து சித்தராமையா கருத்து!
கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பியதாக கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர், 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞர், கேரளா மாநிலம் வயநாடு- சுல்தான்பத்தேரியைச் சேர்ந்த அஷ்ரப் எனவும், அவர் கர்நாடகாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். ஆனால் கைதானவர்கள் மட்டுமே அந்த இளைஞர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அது தவறு என்றும், அது தேசத்துரோகத்திற்குச் சமம் என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,
“பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டிருந்தால், அது தவறு. அது யாராக இருந்தாலும் சரி. விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை வரட்டும், யார் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெளிவாகும். யாராவது பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசினால் அது தவறு; அது தேசத்துரோகம்” என்று தெரிவித்தார்.
அந்த இளைஞர் அப்படி ஒரு முழக்கத்தை எழுப்பினாரா என்பது இன்னும் உறுதிபட தெரியவில்லை. இருப்பினும் ஒரு முழக்கத்திற்காக இளைஞரை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.